திருநாவுக்கரசு தமிழ்ச்செல்வன் (ஜெகன்)….
என் அன்பெனும் கூட்டில் இன்பம்
இறைத்த வன்னி மண்ணின்
என் இனிய வானம் பாடியே..
என் வீட்டு பஞ்ச பாண்டவரில்
மூவானுக்கு இன்று கண்ணீர்
பூக்கள் நாள் !
மாங்காத மாசி இருபத்தியாறு
இரணைப்பாலை தேசமெங்கும்
இயமன் பூர்வீகம் ஆனா வரலாறு !
வார்த்தைகள் வர வில்லை அண்ணா..
வாக்கியங்கள் தொடுக்கவும்
முடியவில்லை என்னால்..
மலையான
மலை உன்னை
காவு கொண்டு போனது அந்த
பாழ்போன சிங்களவன் குண்டு !
நீ வானுயர பறந்து ஏழு
ஆண்டுகள் ஆகித்தான் விட்டன உன்
குழந்தையும் ஏழு
வயதுகளை எட்டியும் விட்டான்.
அப்பா எங்கே என அவன் கேட்கும்
போதெல்லாம் நீ என்கூட
லண்டனில் இருப்பதாக பெத்தவள்
உன் குழந்தையை தேற்றி வருகிறாள்
இந்த கொடுமை எங்கு
போய் முடியும் அண்ணா..?
திருமண மாலை வாட முதல்
நீ வாடி போனது ஏனோ அண்ணா?
நீ உதித்த கருவறையில் நானும்
உதித்தது கடவுள் தந்த வரமா?
நான் செய்த தவமா?
இல்லை இல்லை நீ என்னை விட்டு
பிரிந்த பின்னர் அனு அனுவாக
கண்ணீர் வடிக்க விதித்திட்ட தண்டனையே இது !
ஒன்றா?
இரண்டா?
எத்தனை இழப்புகள் என்னுள்?
உங்கள் ஆறு பேரையும் இழந்து
அல்லாதுப்பட்டு நிக்கிறேன்
தேற்றுவார் யாருமன்றி !
வன்னி தென்றலில்
உங்களை
தேடி கூட பார்க்கிறேன் ஆறு
பேரில் யாரேனும் ஒருவராயிலும்
என் கண்ணில் அகப்படுவீர்களா என !
ஊரழ,வீடழ,நானும் அழுது
உருக்குலைந்து உனையிழந்து
துடுக்கிழந்து துயர் சுமந்து
மூச்சடங்கி வலையர் மடம் நீர்
சிதம்பிய சகதியில் உனை
புதைத்து விட்டு இன்று அந்த
இடத்தை கூட அடையாளப்படுத்திக் கொள்ள
முடியாமல் தவித்து நிக்கின்றேன் !
என் கண்ணீரை
கட்டி வைக்க
கடல் ஒன்றை வெட்டி வைத்தேன்
கப்பல் விட்டும் வேடிக்கை பார்த்ததே
அந்த கண்கெட்ட கடவுள் !
என் அடுத்த பிறப்பிலும்
எனக்கு அண்ணாவாக நீயே
வேண்டும் என இரக்கமே
இல்லாத கருணையற்ற
கண்கெட்ட கடவுளிடம்
மண்டியிட்டு வேண்டுகிறேன் !
கரங்கள் கூப்பியே
நினைவுகள் ஒடுக்கியே
விழிகளில் வழிந்தோடும்
கண்ணீருடன் உன் நினைவுகள்
சுமந்து
கிடக்கிறது என் வீடும்
என் மனதும் !!
-மார்ஷல் வன்னி-