யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும், பின்னர் வவுனியா திருநாவற்குளத்தில் வசித்து வந்தவருமான பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்) அவர்கள் இன்று 11.04.2014 வெள்ளிக்கிழமை மரணமெய்தினார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு மக்கள் பணியினை ஆரம்பித்த தோழர் நந்தன், மலையக ஏதிலி மக்களை வடக்கு கிழக்கு எல்லைப் பிராந்தியத்தில் குடியேற்றும் காந்தீயத்தின் பணிகளில் அயராது, அர்ப்பணிப்போடு பாடுபட்டவர்.

1982களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) தம்மை இணைத்துக் கொண்டு ஆயுதப் பயிற்சிபெற்ற தோழர் நந்தன், 1983 முதல் 1986 வரையிலான காலப்பகுதியில் கழகத்தின் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்டார்.

கழகப்பணிகளில் தனது சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்த சிரேஸ்ட உறுப்பினர் தோழர் நந்தன், கழகத்தின் பணிகளில் தொடர்ச்சியாக மரணிக்கும் வரையில் தனது பங்களிப்பை ஆற்றினார்.

சில மாதங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் நந்தன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் யாழ். திருநெல்வேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமெய்தினார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)-
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்)-