துயர் பகிர்வோம்…

தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்) இயற்கை எய்திய செய்தி துயர் மிகுந்தது.

ஆயுதப் போராட்டம் வீறு கொண்டெழுந்த 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தி, தன்னைக் கழகத்தோடு இணைத்துக்கொண்டு 1989ஆம் ஆண்டுவரை தீவிர செயற்பாட்டாளராக தளத்தில் இயங்கினார்.

எளிமையும், நேர்மையும், துணிவும் மிக்க ஒரு ஆயுதப் போராளியாக மட்டுமன்றி அன்றைய அரசியல் நிலைமைகளை சரிவரப் புரிந்து, அது தொடர்பான கருத்துக்களை கழகத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய பாதையில் அவ்வவ்போது எழுதிவந்த ஓர் எழுத்துப் போராளியுமாவார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு திசைமாறுவதாக உணர்ந்த தோழர் மூர்த்தி 1989இல் தளத்திலிருந்து புலம்பெயர்ந்தார்.

புலம்பெயர் தேசத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தபோதும் தளத்தில் இயங்கிய தோழர்களுடன் அவ்வப்போது தொடர்பில் இருந்தார்.

அண்மையில் இலங்கை சென்றிருந்த போது, போர் நடந்த பகுதிகளை நேரில் சென்று பார்த்து மனம் வெதும்பினார்.

போரினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளை தனிப்பட்ட வகையில் செய்திருந்தது அவரது மனிதாபிமானத்துக்கு ஒரு சிறு சான்று.

அவரது இழப்பு வேதனைக்குரியது.

அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைச் செலுத்துவதுடன், அவரது குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.

தோழர்கள்
-தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் PLOTE /ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி DPLF (ஐக்கியஇராச்சியம்)
01/03/2018