துயர் பகிர்கின்றோம்…!

மலர்வு – 16.09.1964 உதிர்வு- 09.09.2015

யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல-403, மின்சாரநிலைய வீதி, திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) சிரேஸ்ட உறுப்பினர் அமரர் அந்தோனிப்பிள்ளை வின்சென்ற் கெனடி அவர்கள் (தோழர் கெனடி)

கழகக் கண்மணியே
கண்ணின் கருவிழியே!
என்ன சொல்லி அழுவதென்று
எதுவும் தெரியாது – சொல்ல
முடியாத் துயர் சுமந்து
சோர்ந்து நாம் நிற்கின்றோம்…

விபத்தென்ற போர்வையிலே
வீணாகிப் போனதுவே உன்னுயிர்
நேசம் மிகு தோழா!
கடைசி நொடிவரை கண்ணியமாய்
கழகப் பணி செய்த கண்மணியே
கனடித் தோழரே!

என்ன சொல்லி நாம் எழுத
நேற்றைய நாள்
நமக்குச் சொந்தமானதுதான்
இன்றைய நாளிலும் இனிவரும் நிமிடமும்
எமக்குச் சொந்தமில்லை – என்று
தெரிந்திருந்தாலும் தோழனே!

நகர்ந்து வரும் நாளைய நாட்களெல்லாம்
நம் மக்கள் சுதந்திரமாய் வாழ்ந்து விட
இளமைப் பருவத்தில்
எல்லா சுய நலனையும்
தூரத்தில் வைத்துவிட்டு – மக்கள்
துயர் துடைக்க வந்தவனே!

காவிய நாயகனே கனடி
கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினனாய்
சிறப்பாய் பணிசெய்தாய்
மக்கள் பணி செய்ய மத்திய குழுவிற்கு
மற்றவர்களால் தேர்வுசெய்த
மதிப்புமிக்க உறுப்பினனாய் உதயமானாய்

நீ பிறந்த பருத்தித்துறை
மண்ணிற்கு சேவைசெய்ய
முன்னாள் நகரசபை நகரபிதாவாக இருந்து
நலன் பல செய்தவனே
தோழர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டு
தூரத்தி;ல் சென்றதேனோ?

நீ கொண்ட இலட்சியத்தை
நிறைவேற்றி வைக்கும்வரை
தோழர்கள் நாம் இருப்போம்
புனிதமாக போய் வா தோழா
அன்புத்தோழனே – உனை நினைத்து
ஆறாத் துயர் சுமந்து அஞ்சலித்து நின்கின்றோம்….

இவர் தம் பிரிவால் வாடிநிற்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதரர்கள், நட்புக்கள், உறவுகளோடு நாமும் இப் பெருந் துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

frames-design1j