இன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது.

சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் இரட்சகர்கள்? சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள். சமூகத்திற்கு அறிவு தேவையில்லை. புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கி பிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப் படுகிறது.

இதனால் இலங்கையில் தமிழர்களின் வாழ்வு மேலும் மேலும் மோசமடையும் நிலை தோன்றியுள்ளது.

மக்களின் சுதந்திரமான வாழ்வின் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

இந்த நிலையில்தான் தன்னலமில்லாத சமூக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் அத்தகைய தலைவர்கள் எமது சமூகத்தில் அரிதிலும் அரிதாகிவிட்டர்கள் என்பதை அடித்துச் சொல்ல முடியும் ஒரு சில தலைவர்கள் மனச்சாட்சி உள்ளவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை செவி மடுப்பவர்கள் சமூகத்தில் மிக மிகக்குறைவு.

ஆனால் குற்றுயிரான சமூகத்தை மரணிக்கச் செய்து வாழ முனையும் பிரகிருதிகள் இருக்கவே செய்கிறார்கள்..

இந்த இடத்தில் தான் தோழர் சுபத்திரன் – ரஞ்சன் – றொபேட் இன் பங்களிப்பு உணரப்படுகிறது. நட்பும், தோழமையும், ஜனநாயகமும், அஞ்சாமையும், அர்ப்பணமும் அவரது அருங்குணங்கள்.

புலிகள் கோலோச்சிய காலத்தில் 1997-2002 வரை யாழ் மாநகரசபையில் ஒரு உறுப்பினராக இருந்து கொண்டு மரண இருளில் வாழ்ந்து கொண்டு ஜனநாயகத்;தின் கூறுகளை இயகுவிக்க சக உறுப்பினர்களுடன் சேர்ந்து முயற்சித்தவர்.

அன்றைய யாழ் மாநகர முதல்வர் செல்லன் கந்தையன் தலைமையில் மறுநிர்மாணம் செய்யப்பட்ட யாழ் நூலகத்தை மீளத் திறப்பதற்கு பாடுபட்டவர்.

ஜனநாயகத்தின் பால் அவருக்கிருந்த அக்கறைக்காகவே அவர் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். இவ்வாறு பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

பலருடைய அர்ப்பணிப்பில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டியிருந்தது. ஜனநாயகத்தை முழுமை பெறச்செய்யும் பணியில் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இராணுவ மயமாக்கல் கலாச்சார
ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் பாசிச அரசியலின் சாயலிலிருந்தும் விடுபட வேண்டும்.

அதற்கு குறைந்த பட்சம் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான அர்த்த பூர்வமான அரசியல் அதிகார அலகுகள் வேண்டும்.

பல்லின சமூக நாடாக இலங்கை மாறுவது மாத்திரமல்ல. அநீதியான சமூக அமைப்பு எல்லாவற்றிலுமே தீவிரமான மாற்றங்கள் தேவை.

தோழர் றொபேட் சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும், பாசாங்கு தனங்களுக்கும் எதிராகவே செயற்பட்டார். கலை இலக்கிய ஈடுபாடும் அவரிடமிருந்தது. மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை விளங்கிக் கொள்ள முற்பட்டவர்.

சோவியத் யூனியனின் வீழ்சிக்கு பின்னரான உலக நிலைமைகள் பொதுவுடைமை இயக்கத்தின் எதிர்காலம், இயக்கவியல் பற்றிய விவாதங்களில் ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவர்.

1980களின் நடுப்பகுதியில் அவர் சிறையில் இருந்த போது ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள. அவரின் நேர்மை, வசீகரம், ஆளுமை, கவித்துவம் எனபன இயல்பாகவே அதனை ஏற்படுத்தியிருந்தன.

தி. ஸ்ரீதரன் சுகு
பத்மநாபா ஈபிஆர்எல்எப்

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/247332.html#sthash.ZlYPLWoy.dpuf